Monday, November 10, 2008

நடப்பது ஜனநாயக ஆட்சி தானா?..குமுதம் அரசு பதில்கள்

வாழ்க்கை ரொம்பவே போரடிக்கிறதே, என்ன செய்வது?

சங்கீத சரவணன், கூறைநாடு.


உங்களுக்குச் சற்றும் விருப்பமில்லாத ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக அர்த்தம். உங்கள் மனதுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கக் கூடிய, இதுதான் வாழ்க்கை என்று நம்பக்கூடிய, படைப்புத் திறன் மிக்க ஒரு வேலைக்கு மாறுங்கள். இத்தனை நாள் தொலைத்ததாக நீங்கள் நினைக்கும் மனமகிழ்ச்சியை கண்டடைவீர்கள். (சம்பளத் திற்கு நான் கியாரண்டிஅல்ல! )

அடுத்த கனவுக்கன்னி தமனாவா?

ஆர். சிவகுமார், தோவாளை.

பழைய மாதுரி திக்ஷ?த்தை நினைவுபடுத்துகிறார். தோற்றத்தில் மட்டும்.

நடப்பது ஜனநாயக ஆட்சி தானா?
ஆர். சண்முகம், மதுரை.


தமிழ்நாட்டில் பொதுவாக நடக்கும் ஆட்சி பற்றிக் கேட்கிறீர்களா? அல்லது உங்கள் ஊரில் நடக்கும் ஆட்சி பற்றிக் கேட்கிறீர்களா?

மகாத்மா காந்தியின் பொன்மொழிகளில் உங்களுக்குப் பிடித்தது எது?
ஆர். செல்வமோகன், முருங்கப்பேட்டை.


"நீ இந்த உலகத்தில் காண விரும்பும் மாற்றங்களை முதலில் உன்னிடம் கொண்டு வா!"

திரைத் துறையினரின் ராமேஸ்வரம் ஊர்வலம், எம்.பி.க்கள் ராஜினாமா, மனிதச் சங்கிலி, அனைத்துக் கட்சிக் கூட்டம் போன்றவை இலங்கைத் தமிழர் பிரச்னையை எந்த அளவுக்குத் தீர்த்து வைக்கும்?
கனகசபாபதி, திரேஸ்புரம்.


உலகத்தின் கவனத்தை சில நாட்கள் ஈர்க்க வைக்கும். அவ்வளவுதான். அப்புறம் எல்லோரும் அவரவர் வேலையை கவனிக்கப் போய் விடுவார்கள். இலங்கைப் பிரச்னை தீர்வதற்கு உடனடித் தேவை தீர்க்க தரிசனம், மனிதாபிமானக் கண்ணோட்டம், விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டையும் விமர்சித்து அடக்கக் கூடிய தார்மீகத் துணிச்சல் மற்றும் நியாயத்தின் பக்கம் நிற்கும் நேர்மை. இவை யாருக்குத் தேவை? மத்திய அரசாங்கத்துக்கு. அது கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை.

நண்பர்கள் தவறு செய்யும் போது அவர்களை எப்படி கண்டிப்பது?
ஆர். செல்லப்பன், ஆத்தூர்.


எதிரிகளை விமர்சிக்கும் போது, அது பூனை எலியைக் கவ்வுவது போல் இருக்க வேண்டும். அதுவே நண்பர்களை விமர்சிக்கும் போது, பூனை தன் குட்டியைக் கவ்வுவது போல் இருக்க வேண்டும். அதனால் கடுதோச்சி மெல்ல எறிக.

இயக்குநர் ஸ்ரீதர்?
எம். சுந்தரவடிவு ஆம்பூர்.


கறுப்பு வெள்ளையில் காவிய ஒளியமைப்பைக் காட்டிய கவிஞர். வண்ணத்தில் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை வரைந்த ஓவியர். மிகைப்படுத்தப்பட்ட நாடகபாணியில் தமிழ் சினிமா தறிகெட்டு ஓடிய காலத்தில், மனித உறவுகளின் சிக்கல்களை மேன்மையாகச் சித்திரித்த இலக்கியவாதி. இன்றைய தமிழ் சினிமாவில் கூடப் பார்க்க முடியாத சூகிளாஸ்' என்று சொல்லப்படும் மேற்பட்ட தரத்தை அன்றே காட்டிய கலைஞர். சினிமாக்களை இயக்காத கடைசி காலங்களிலும் ஒரு சாதித்த இயக்குநரின் மிடுக்குடன் அவர் இருந்தது தன்னம்பிக்கையின் அடையாளம்.

முன் ஜென்மம், மறுபிறவி போன்றவற்றில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
ஏ.ஜி.கல்யாணசுந்தரம், கோவை.


""போன ஜென்மத்தில் உங்களிடம் நான் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். இப்போது திருப்பித் தரலாமா?'' என்று யாராவது சொன்னால் நம்பலாம். "போன ஜென்மத்தில் உமது மனைவியை நான்தான் கல்யாணம் செய்திருந்தேன். ப்ளீஸ் கிவ் ஹர் பேக்..'' என்றால்? மரணம் என்பது என்னைப் பொறுத்தவரை முற்றுப்புள்ளி. அங்கே சூகமா' வே கிடையாது.

சர்தார்ஜி ஜோக் ஏதாவது?
என். காளிதாஸ், சிதம்பரம்.


இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் அது. அப்போது இந்தியாவில் விளைந்த அரிசிக்கு உலகச் சந்தையில் கிராக்கியே இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் பாஸ்மதி அரிசி அதை விடச் சுவைமிக்கது. பிரிவினையின் போது பாஸ்மதி விளைந்த நிலப்பகுதிகள் பாகிஸ்தான் வசம் சென்று விட்டன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. அவர்களின் அடிப்படைத் தொழிலே விவசாயம்தான். தங்களின் அரிசிக்கு உலக மார்க்கெட்டில் மதிப்பில்லாதது அவர்களை ரொம்பவே பாதித்தது. ஆனால் அவர்களிடம் பாஸ்மதி அரிசியின் விதைகள் கூட இல்லை. என்ன செய்வது? பஞ்சாப் மாநில சர்தார்ஜி விவசாயிகள் ரகசியமாக ஒன்று கூடினார்கள். எல்லை தாண்டி உள்ள பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி விதை நெல்லைக் கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள். அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. எல்லையில் உள்ள இருதரப்பு ராணுவத்துக்கும் கொடுக்கக் கூடிய லஞ்சப் பணமே கோடிக்கணக்கில் ஆகும்.


சர்தார்ஜிக்கள் அசரவில்லை. பஞ்சாபின் அனைத்து விவசாய கிராமங்களிலும் இதற்கான நிதி ரகசியமாகத் திரட்டப்பட்டது. தேவைப்பட்ட பணம் வசூலாகச் சில வருடங்கள் பிடித்தன..ஒரு நாள் நள்ளிரவு, பாகிஸ்தானிலிருந்து நாற்பது லாரிகளில் பாஸ்மதி விதை நெல் மூட்டைகள் எல்லை கடந்து பஞ்சாப் வந்தன. பாஸ்மதி விவசாயமும் கோலாகலமாக ஆரம்பித்தது. சர்தார்ஜிக்கள் உடனடி லாபத்தை எண்ணி அறுவடையை சந்தைக்கு அனுப்பவில்லை. எதிர்காலத்தை மனதில் வைத்து விதை நெல்லை சேமிப்பதற்காக அடுத்த சில வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அடுத்த சில வருடங்களில் அந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்தது. உலக அரிசிச் சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசி விற்பனையில் பாகிஸ்தானை ஓரம் கட்டியது. ராங் ரூட்டில் சென்றாலும் சர்தார்ஜிக்கள் சாமர்த்தியமாய் செய்துகாட்டிய பெரும் சாதனை இது. அப்படிப்பட்ட புத்திசாலி காரியக்காரர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!


(நன்றி: பாரதி மணியின் கட்டுரை)

2 comments:

RAMASUBARAMANIAM said...

SARDHARJI'S ARE NEVER CONSIDERED TO BE FOOLS AS DEPICTED IN JOKES. BUT IN GENERAL, FOR SOME HUMOROUS CREATIONS WE UTILISE THEM. HOWEVER, SARDHARJI;S ARE CONSIDERED AS INTELLIGENT IDIOTS...IN JOKES ONLY. GREATEST STALWARTS ARE THERE FROM PUNJAB...WHICH I CAN NOT WRITE HERE, YOU MAY REFER APPROPRIATE BOOKS FOR THE SAME INCLUDING Dr MANMOHAN SING, PM OF INDIA..WHO IS A GREAT GIFT TO INDIA...WE DEFINITELY SHOULD BE PROUD IN LIVING UNDER HIS LEADERSHIP.AT THIS JUNCTURE,INDIAN ECONOMY IS BEING PROTECTED IS MAINLY BECAUSE OF THIS GREAT MANS VISIONARY PLANS ONLY..LOTS OF GREAT PEOPLE ARE EMERGED FROM PUNJAB, AND SETTLED THROUGH OUT THE WORLD BECAUSE OF THEIR KNOWLEDGE,INTELLIGENCE, AND BUSINESS TECHNIQUES.

ஆட்காட்டி said...

எதுக்கு இப்பிடி?

Post a Comment